திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, நூற்பாலை மில்கள் அதிகளவில் இயங்குகின்றன. இந்த நூற்பாலை மில்கள் திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பல மாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பளித்து வருகிறது. இந்நிலையில் கரோனா பாதிப்பு காரணமாக நூற்பாலை மில்கள் தொடர்ந்து இயங்காமல் இருக்கிறது.
இதனிடையே தொழில் வளர்ச்சியினைப் பாதுகாத்திடும் வகையில், கட்டுப்பாடுகளுடன் தொழிற்சாலைகளை இயக்கிட தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது. ஆனால், அரசு அனுமதி வழங்கியபோதிலும் மில் உரிமையாளர்கள் அதனை இயக்கிட ஆர்வம் காட்டவில்லை. இதனால், மில்கள் அனைத்தும் பணியாளர்களின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.
இது குறித்து தமிழ்நாடு ஸ்பின்னிங் மில் சங்கத்தின் முதன்மை ஆலோசகர் வெங்கடாசலம் கூறுகையில், "மில்கள் இயங்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதியளித்தாலும் அதனை இயக்குதில் பெரும் சிரமம் உள்ளது. தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாகவே மில்கள் இயக்குவதை பெரும்பாலான உரிமையாளர்கள் தவிர்த்துள்ளனர். உள்ளூர் தொழிலாளர்கள் மட்டுமல்ல வெளி மாவட்ட, வெளி மாநிலத் தொழிலாளர்கள் அதிகமாக பணியமர்த்தப்படுவார்கள்.
வெளிமாநிலத் தொழிலாளர்கள் இங்கேயே தங்கி வேலை செய்வார்கள். தற்போது, வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல விரும்புகின்றனர். இவர்கள் சென்றுவிட்டால் ஆரம்பித்த வேலை, பணியாட்கள் இல்லாமல் தடைபடும். அதேபோல் இயந்திரங்களில் சிறு பழுது ஏற்பட்டாலும் அதனை சரிசெய்யத் தேவையான பொருள்கள் தற்போது கிடைப்பதில்லை. மில்களை இயக்குவதிலுள்ள மற்றுமொரு சிக்கல் தொழிலாளர்களில் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதியானாலும் அந்த மில் முழுவதும் மூடப்படும். ஒரு நாளுக்கு 2500 டன் என கிட்டத்தட்ட 37 ஆயிரத்து 500 டன் நூல்கள் பிற மாவட்டங்களுக்கே கொண்டு செல்ல முடியாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதில், இன்னும் நூல்கள் செய்து இருப்பு வைக்க நாங்கள் விரும்பவில்லை.
மாவட்டங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்து இல்லாமல், எப்படி சந்தைப்படுத்த முடியும். ஆதலால், தற்போது நூற்பாலை மில்களை இயக்குவதை விட ஊரடங்கு முடிந்த பிறகு இயக்குவதே சிறந்தது என முடிவு செய்துள்ளோம். ஆனால், சிலர் மில்களை இயக்க விருப்பம் தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுள்ளனர். இருப்பினும் மொத்தமுள்ள 250 மில்களில் 40 மில்கள் மட்டுமே இயங்கவுள்ளன" என்றார்.
இதனிடையே திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி நூற்பாலை மில்கள் குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அரசு ஆணைப்படி கிராமப்புறங்களில் உள்ள 40 மில்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவை 50 பணியாளர்களுடன் இயங்கலாம். குறிப்பாக இதய நோய் போன்ற எளிதில் நோய்த்தொற்றுக்கு ஆளாகக்கூடிய நபர்களை பணியமர்த்தக்கூடாது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பிழைக்குறிப்பு - வீடியோ மற்றும் இமேஜை ப்ரிவியூவில் தெரியும் படி வைத்து, செண்ட் டூ பப்ளிஷ் செய்யவும்
இதையும் படிங்க: விபத்திற்குள்ளான இந்திய விமானப்படை விமானம்