திண்டுக்கல்: பழனியில் 75 வயது மூதாட்டி ஒருவர் கரோனா நிவாரண நிதியாக 51ஆயிரம் ரூபாய் வழங்கினார்.
தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுகுறித்து அனைவரும் நிவாரணம் வழங்கி உதவ வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையடுத்து பழனி லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி ராமசீதா என்பவர், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக 51ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்க விருப்பம் தெரிவித்ததையடுத்து, அவரது வீட்டிற்கே சென்ற பழனி வட்டாட்சியர் வடிவேல் முருகன் மூதாட்டியிடம் காசோலையை பெற்றுக்கொண்டார்.
இதேபோல் கடந்த வாரம் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த மூதாட்டி சுந்தரி என்பவர் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக 20ஆயிரம் ரூபாய் நிதி வழங்கினார். தொடர்ச்சியாக பழனி பகுதியில் நிவாரண நிதி வழங்க மூதாட்டிகள் முன்வருவது வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: காய்கறிகள் விலை ஏற்றம்: வியாபாரிகளுக்கு உணவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை