திண்டுக்கல்: கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கொடைக்கானலுக்குச் செல்ல சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்படி, இ- பதிவு செய்தால் மட்டுமே கொடைக்கானலுக்குள் நுழைய முடியும்.
தற்போது தமிழ்நாடு அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ளதால், கொடைக்கானலுக்கு வெளி மாவட்ட சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் வந்து செல்கிறார்கள். இதுதவிர அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.
ஜிகா வைரஸ் பீதி
கேரள மாநிலத்தில் தற்போது ஜிகா வைரஸ் தொற்றுப் பரவி வரும் நிலையில், கொடைக்கானலுக்கு வரும் கேரள மாநில சுற்றுலாப்பயணிகளை மருத்துவப் பரிசோதனை செய்த பின்னர் அனுமதிக்க வேண்டுமென கொடைக்கானல் பொதுமக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சோதனை அவசியம்
கொடைக்கானல் வெள்ளி நீர் வீழ்ச்சிப் பகுதியில் சோதனை சாவடி உள்ளது. இங்கு மருத்துவக் குழுவினரை நியமித்து கேரளாவிலிருந்து வருபவர்களை சோதனை செய்து அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்களின் நலனையும், நோய்ப் பரவலையும் கருத்தில்கொண்டு மாநில அரசும், மருத்துவத்துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்கும் என கொடைக்கானல்வாசிகள் நம்பிக்கையுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
இதையும் படிங்க: ஜிகா வைரஸ் முன்னெச்சரிக்கை... சோதனை சாவடிகளில் கண்காணிப்பு..