திண்டுக்கல்: நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்மையநாயக்கனூரில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இது காமராஜர் ஆட்சிக்காலத்தில் துவங்கப்பட்ட சுமார் 75-ஆண்டு பழமையான பள்ளியாகும். இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுமார் 300 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் அம்மையநாயக்கனூர், கொடைரோடு, இந்திரா நகர், ராஜதானிக்கோட்டை, பொட்டிகுளம், செட்டியபட்டி, நக்கம்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைய கட்டிடத்தில் 4 மற்றும் 5ஆம் வகுப்புகள் செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாகப் பெய்து வந்த தொடர் கனமழை காரணமாக, 4 வகுப்புகளில் சிமெண்ட் மேற்கூரைகள் மற்றும் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்துள்ளது. நேற்று இரவு இச்சம்பவம் நடைபெற்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்களும், பெற்றோரும் பழமையான கட்டிடங்களை அகற்ற வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் மாணவ, மாணவிகள் பாதுகாப்பாகப் பள்ளியில் அமர்ந்து படிப்பதற்கு, பழைய கட்டிடங்களை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடங்களைக் கட்ட வேண்டும் எனப் பெற்றோர்கள் மாவட்ட நிர்வாகத்திற்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: சேலம் பெரியார் பல்கலையில் போலீசார் திடீர் சோதனை.. ஆளுநர் வரவுள்ள நிலையில் அதிகரிக்கும் பரபரப்பு!