திண்டுக்கல் மாவட்டம் மலைக்கோட்டை அடிவாரத்தில் அய்யன் குளம் எனும் நீர்நிலை அமைந்துள்ளது. இந்த குளத்தின் மேற்பகுதி முழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்து காணப்படுவதால் நீரின் ஆழமான பகுதி தெரியாது. மேலும் குளக்கரையில் அதிக அளவில் புற்கள் படர்ந்திருக்கும்.
இந்நிலையில், நேற்று (ஏப்.28) குளக்கரையில் மேய்ந்து கொண்டிருந்த சுமார் ஒரு வயதே ஆன பசுங்கன்று குளத்தின் ஆழமான பகுதியில் தவறி விழுந்து விட்டது. முற்றிலுமாக ஆகாயத்தாமரை படர்ந்திருந்ததால் கன்றால் நீர்நிலையை விட்டு வெளியே வர முடியவில்லை.
இதனைக் கண்ட தாய்ப்பசு, கன்றை காப்பாற்ற முடியாமல் வினோதமாக சத்தம் எழுப்பியபடி அங்கும், இங்கும் ஓடியது. அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த உடற்கல்வி ஆசிரியர் மாரிமுத்து என்பவர் இதனை கவனித்தார்.
உடனடியாக தனது நண்பருடன் இணைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கன்றை மீட்டு தாய்ப்பசுவிடம் சேர்த்தார். கன்றைக் கண்ட சந்தோசத்தில் அதனை நாவால் வருடியபடி தாய்ப்பசு அங்கிருந்து அழைத்துச் சென்றது. கன்றை மீட்க தாய்ப்பசு நடத்திய பாசப்போராட்டம் அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் கன்றை காப்பாற்றிய உடற்கல்வி ஆசிரியரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க : சிறிதேனும் ஓய்வு கிடைக்குமா என ஏங்கித் தவிக்கும் கர்ப்பிணி காவலர்கள்!