தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திண்டுக்கல் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார்.
மார்ச் 13ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்த அவர், நேற்று ( மார்ச் 15) மாலை திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள குமரன் திருநகரில் தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், "தாய்மார்களுக்கு தெரியும் சிலிண்டர் விலை என்ன என்று? ஒரு சிலிண்டரின் விலை 4 ஆயிரத்து 500 முதல் 5 ஆயிரம் வரை விலை கொடுத்து வாங்கப்படுகிறது. ஆனால் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் இலவசமாக தரப்படும்" என்று தெரிவித்தார். முன்னதாக, ஸ்டவ் அடுப்புக்கு டீசல் தேவையில்லை என்றும் கூறினார்.
இதை பார்த்த மக்கள், "நமது அமைச்சர் மீண்டும் உளறத் தொடங்கி விட்டார்" என்று கூறி சிரித்தபடி சென்றார்கள். இதனிடையே இன்று திண்டுக்கல்லில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவரிடம் முதல் வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தங்களது பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதியையும் செய்து தராததால் வாக்கு சேகரிக்க வரக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.