திண்டுக்கல் மாநகராட்சி வார்டு எண் 3, 7, 8, 9 இணைக்கும் வடக்கு காளியம்மன் கோயில் முதல் ராமநாதபுரம் வரை உள்ள பகுதிகளில் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணியில் வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கிவைத்தார்.
அதேபோல திண்டுக்கல் மாவட்டம் காமராஜர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் வசதிக்காக மூன்று அரசுப் பேருந்துகளை வனத் துறை அமைச்சர் கொடியசைத்து தொடங்கிவைத்தார். பின்னர் பணியின்போது மரணமடைந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் மருதராஜ், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் செந்தில் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய வனத் துறை அமைச்சர் சீனிவாசன், ”தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் தனி மனிதன் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமூக வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ஆகும்.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகள், வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்டவைகளை தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தொடர்ந்து வளர்ச்சிப் பணிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் அனைத்து மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் கிடைக்கச் செய்யும்வகையில் சிறப்பான நிர்வாகம் நடைபெற்றுவருகிறது.
பொதுமக்களில் பெரும்பான்மையானோருக்கு பேருந்துகளின் தேவை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. ஆதலால் பொதுமக்களின் பொருளாதார நிலையை கருத்தில்கொண்டு தனியார் பேருந்துகளைவிட அரசுப் பேருந்துகள் அதிகம் இயக்கப்படுகின்றன.
குறிப்பாக பிற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் குறைந்த கட்டணத்தில் அதிக வசதிகளுடன் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன” என்று கூறினார்.
இதையும் படிங்க: ஓய்வூதியத்தை இழுத்தடித்த அரசு; முதலமைச்சர் காலில் விழுந்து கதறிய பெண்