திண்டுக்கல் மாவட்டம், மாலைப்பட்டி பகுதியில் உள்ள பாலமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (55). இவர் அப்பகுதியில் உள்ள விவசாயிகளிடம் உள்ள கறவை மாடுகள் மூலமாக பால் கறந்து திண்டுக்கல் நகர் பகுதியில் விற்பனை செய்து வருகிறார்.
நேற்று (ஏப். 11) இரவு 9 மணிக்கு முருகேசன் மாலைப்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் திடீரென முருகேசனை கத்தி அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், படுகாயமடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் முருகேசனின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொணடனர்.
இச்சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், "முருகேசனுக்கு திருமணம் முடிந்து 4 பெண் குழந்தைகள் உள்ளனர். முருகேசன் எந்த ஒரு தகராறுக்கும் செல்லாத மனிதர். ஆனால் திடீரென்று முருகேசன் வெட்டி படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்றனர்.
இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் அல்லது சொத்து தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: செல்ஃபி எடுக்கும்போது தடுமாறி கூவத்தில் விழுந்த இளைஞர்