கொடைக்கானல்: கொடைக்கானல் பாதரச தொழிற்சாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட கருணைத் தொகையில் முறைகேடு செய்தவர்கள் மீது நீதி விசாரணை செய்ய தொழிலாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
தொழிலாளர்கள் கோரிக்கை
பாதரச தொழிற்சாலையால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சார்பிலான கூட்டம் அண்ணாசாலை பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு, பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் ஒருங்கிணைப்பாளர் சேவியர் தலைமை தாங்கினார். தலைமை ஒருங்கிணைப்பாளர் மோகன் குமார், சென்னை வழக்கறிஞர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். சுற்றுச்சூழல் காரணமாக 2001ஆம் ஆண்டு கொடைக்கானலில் செயல்பட்ட பாதரச தொழிற்சாலை மூடப்பட்டது. இதையடுத்து 2002ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்டத் தொழிலாளர்கள் நீதிமன்றத்தை அணுகி தங்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கைவிடுத்தனர்.
நீதி விசாரணைக்குக் கோரிக்கை
தொடர்ந்து நடந்த வழக்கின் இறுதியில் பாதரச தொழிற்சாலை நிர்வாகம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கியது. இவ்வாறு வழங்கப்பட்ட நிவாரண தொகையினை தொழிலாளர்களின் அமைப்பின் சார்பில் சில நிர்வாகிகள் முறைகேடு செய்துள்ளனர் எனவும், 60-க்கும் மேற்பட்ட பணியாற்றாதவர்களுக்கு நிவாரணத் தொகையை முறைகேடாகப் பெற்றுத்தந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுபற்றி பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மதுரை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய விசாரணை நடத்தி அறிக்கைத் தாக்கல்செய்ய உத்தரவிட்டுள்ளது.
இது பற்றி தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தவும், உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணையைத் தொடங்கி அறிக்கை தாக்கல்செய்யக் கோரியும், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணத் தொகையில் முறைகேடு செய்தவர்கள் மீது நீதி விசாரணை நடத்தக் கோரியும் இந்தக் கூட்டத்தில் தொழிலாளர்கள் கோரிக்கைவிடுத்தனர்.
இதையும் படிங்க: 3000 ஆண்டுகள் பழமையான கல்திட்டைகள், முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு