அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் கரோனா தொற்று குறித்தான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவர் ஜோஷி நிர்மல் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் சீனிவாசன் பேசுகையில், ”கரோனா வைரஸ் தொற்றை தடுக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை, பழனி ஆகிய பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று 56 நபர்களுக்கு இருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் உரிய சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் தடுப்பு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் 440 படுக்கைகளும், ஆறு தனியார் மருத்துவமனைகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டும் தயார் நிலையில் உள்ளது.
தொடர் கண்காணிப்பில் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்காக அலுவலர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் கரோனா பாதிப்பு காரணமாக கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தவும், நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு மருந்து மாத்திரைகளை கூடுதலாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.