மதுரை மாவட்டம் உத்தங்குடி பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் கடந்த 15ஆம் தேதி தனது நண்பர்களான மணிகண்டன், முனிசாமி ஆகியோருடன் மதுரை கீழ வெளி வீதி செயின்ட் மேரிஸ் சர்ச் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது காரில் வந்த ஐந்திற்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் முருகானந்தத்தை வெட்டிக் கொலை செய்துவிட்டு, தப்பி ஓடியுள்ளனர்.
இக்கொலை சம்பவ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த கீரைத்துறை காவல் துறையினர், கொலையாளிகளை வலைவீசி தேடிவந்தனர்.
காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், திமுக பிரமுகர் குருசாமி, அதிமுக பிரமுகர் ராஜபாண்டி ஆகியோரின் குடும்பத்தினரிடையே முன்பகை காரணமாக நடந்த தொடர் கொலைகளையடுத்து, வீ.கே. குருசாமியின் ஆதரவாளர்கள், ராஜபாண்டியன் ஆதரவாளர்களான மணிகண்டன், முனிசாமி ஆகிய இருவரையும் கொலைசெய்ய திட்டமிட்டது தெரியவந்தது.
மேலும், சம்பவ தினத்தன்று முருகானந்தத்தை குருசாமியின் ஆதரவாளர்களான சின்ன அலெக்ஸ் (எ) அலெக்ஸ்பாண்டியன், அழகுராஜா, பழனிமுருகன், தவசி உள்ளிட்ட மேலும் சிலர் சேர்ந்து கொலை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து கொலை குற்றத்தில் தொடர்புடையவர்களை காவல் துறையினர் தேடிவந்த நிலையில், இவ்வழக்கில் முதல் குற்றவாளியான அலெக்ஸ்பாண்டியன் திண்டுக்கல் நீதிமன்றத்தில் இன்று காலை சரணடைந்தார்.
இதைத்தொடர்ந்து அவரை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்ற நடுவர் தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.
அதன் பின்னர் அலெக்ஸ் பாண்டியன் திண்டுக்கல் மாவட்டம் பழனி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.