திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே உள்ள தெத்துப்பட்டியைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 38). இவர் இதே பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரை மிரட்டி அருகிலிருந்த சோலைக்காட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து அந்நபர் தப்பியோடியுள்ளார்.
தொடர்ந்து இது குறித்து கன்னிவாடி காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கன்னிவாடி பகுதியில் பதுங்கியிருந்த பெரியசாமியை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 15 வயது சிறுமிக்கு இதே போன்று பாலியல் துன்புறுத்தல் அளித்ததற்காக போக்சோ சட்டத்தில் அந்நபர் ஏற்கனவே கைது செய்யப்பட்டது தெரியவந்தது.
மேலும், ஊரில் இதே போன்று பல சிறுமிகளை மிரட்டி அந்நபர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி உள்ளதும் தெரியவந்தது. இந்நிலையில், 14 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய குற்றத்திற்காக பெரியசாமி நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஒரே நபர் போக்சோ சட்டத்தின் கீழ் இரண்டாவது முறையாகக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.