பழனி கணபதி நகரைச் சேர்ந்தவர் முருகேசன். கூலித் தொழிலாளியான இவரது மனைவி சங்கிலியம்மாள் (மாற்றுத்திறனாளி), இவரது மகன் கார்த்தி. இவருக்கு இரண்டு மகள்கள்.
முருகேசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில், கார்த்தி கட்டட வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காத்துவந்த நிலையில் நேற்றிரவு முருகேசனின் இளைய மகள் காயத்ரி (16) என்பவர் படுகாயங்களுடன் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
குரல்வளையை நெரித்துக்கொலை
அப்போது மருத்துவர்கள் பரிசோதனையில் காயத்ரியின் குரல்வளை நெரிக்கப்பட்டு உடைந்திருப்பது தெரியவந்தது. மேலும் மருத்துவம் பலனின்றி காயத்ரி உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த பழனி நகர காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
இதில், காயத்ரி கடந்த சில நாள்களாகத் தொலைபேசியில் ஒருவருடன் பேசிப் பழகிவந்தார், இது குறித்துப் பலமுறை எச்சரித்தும் அவர் கேட்கவில்லை. காயத்ரியின் பெரியம்மா மகன் பாலமுருகன் என்பவர் காயத்ரி தனியாக இருந்தபடி தொலைபேசியில் நீண்ட நேரமாகப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து மிரட்டியுள்ளார்.
இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆவேசமடைந்த பாலமுருகன் காயத்ரியைக் கடுமையாகத் தாக்கி அவரது குரல்வளையை நெரித்துள்ளார். இதில் மயக்கமடைந்த காயத்ரியை பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்து பாலமுருகன் சிகிச்சைக்காக அனுமதித்தார் எனத் தெரியவந்தது.
திட்டமிட்டுக் கொலையா?
தற்போது பழனி நகர காவல் துறையினர் பாலமுருகனைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் காயத்ரியைத் தாக்கும்போது பாலமுருகன் மட்டும் இருந்தாரா அல்லது அவரது குடும்பத்தினரும் உடன் இருந்தனரா?
சம்பவம் நடக்கும்போது காயத்ரியின் குடும்பத்தினர் எங்குச் சென்றிருந்தனர்? காயத்ரியைத் திட்டமிட்டு கொலைசெய்தனரா? காயத்ரி தொலைபேசியில் பேசிப் பழகிய நபர் யார்? எனப் பல்வேறு கோணத்தில் விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: ஒரு பெண்ணை இருவர் காதலித்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை