தமிழ்நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு அறிவித்திருந்தார்.
இதையடுத்து கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதும் பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும், திடக்கழிவு மேலாண்மையை செயல்படுத்த வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், வழக்கமான நடவடிக்கையாக இல்லாமல், விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்திருந்தார். இந்நிலையில், ஊட்டியில் இருப்பது போல கொடைக்கானலிலும் தற்போது ஏழு விதமான பிளாஸ்டிக் பொருள்களின் விற்பனைக்கும் பயன்பாட்டிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கொடைக்கானல் நகராட்சி ஆணையர் நாராயணன் கூறுகையில், "கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதும் ஒரு லிட்டர் மற்றும் இரண்டு லிட்டர் கொள்ளவு கொண்ட தண்ணீர் கேன்கள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் கொண்டுவருவதற்கும் விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னோட்டமாக மார்ச் 15ஆம் தேதி முதல் அவற்றைப் பயன்படுத்துபவர்களுக்கும், விற்பனை செய்பவர்களுக்கும் அறிவுரை வழங்கப்படும். அதன்பிறகு கடும் அபராதம் விதிக்கப்படுவதுடன், பொருள்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும்.
இதற்காக கொடைக்கானல் மலை அடிவாரப் பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகள் கடுமையாக்கப்படும்'' என்றார்.
இதையும் படிங்க: மேம்பாலம் கட்டடத்தின் மேலிருந்து கொட்டும் தண்ணீரில் சினிமா பாட்டு!