மலைகளின் இளவரசியான கொடைக்கானல், சுற்றுலாப்பயணிகள் அதிகம் விரும்பும் இடமாக இருந்துவருகிறது. பண்டிகை நாள்கள் மட்டுமின்றி தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறையை கழிக்கவும் ஏராளமான பயணிகள் இங்கு வருகை தருவார்கள்.
இவர்கள், கொடைக்கானலில் நிலவும் இதமான காலநிலையை அனுபவித்து செல்வர். மலைகளின் நடுவே கொஞ்சி விளையாடும் மேகக் கூட்டங்களும், உறைய வைக்கும் குளிரும் சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்தும்.
கொடைக்கானல் நட்சத்திர ஏரி
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் விரும்பும் மற்றொரு பகுதியாக நட்சத்திர வடிவிலான ஏரி அமைந்துள்ளது. இதை 1863 ஆம் ஆண்டு மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த ஆங்கிலேயர் சர் ஹென்றி லெவிங்ச் என்பவர் உருவாக்கினார்.
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த ஏரியில் படகுசவாரி செய்து மகிழ்வது வழக்கம். இந்த ஏரியைச் சுற்றியுள்ள சாலையில் ஏரியின் அழகினை ரசித்தபடி நடைப்பயிற்சி செய்தும், சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்தும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்வார்கள்.
ரூ.88 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாடு மற்றும் வெளிமாநில, வெளிநாட்டவரும் அதிகம் விரும்பும் இடமாக குளு குளு கொடைக்கானல் இருந்து வருகிறது. கொடைக்கானல் ஏரியை பராமரிப்பதற்காகவும் அழகுப்படுத்தவும் கடந்த 2013 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் 88 கோடி ரூபாய் ஒதுக்கினார்.
ஆனால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்து தற்போது கைவிடப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில் மையப்பகுதியில் அமைந்துள்ள ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரானது பழனி மக்களுக்கு குடிநீராகவும் இருந்துவருகிறது. கடந்த வருடம் ஏரியில் மனிதக் கழிவுகள் கலப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது கொடைக்கானல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் நட்சத்திர ஏரியில் தற்போது ஏரி முழுவதும் ஹைட்ரெல்லா உள்ளிட்ட பல்வேறு களைச்செடிகள் காணப்படுகின்றன.
சாக்கடை கலப்பு?
ஆகையால் ஏரி மாசு ஏற்பட்டு சாக்கடை போன்று காட்சியளிக்கிறது. இதனால் ஏரி முழுவதிலும் மஞ்சள் மற்றும் கரும்பச்சை நிறமாகவும் மாறி துர்நாற்றமும் வீசியும் வருகிறது. இதனால், கரோனா பெருந்தொற்றிக்கு பிறகு கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மறுபுறம், ஏரியில் படகு சவாரி செய்து மகிழும் சுற்றுலாப் பயணிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் இருந்து வருகிறது. ஏரியின் ஓரங்களில் புற்களால் புதர்கள் மண்டியும் காணப்படுகிறது. இதுபோன்று, ஏரி மாசடைந்துவருவதால் அதன் அழகும் மாறி வருகிறது. ஏரியை பராமரிக்க பலகோடி ரூபாய் மதிப்பில் தீட்டப்பட்ட திட்டமும் என்னானது என்பது குறித்து தெரியவில்லை. ஏரியை சுற்றி நடைபாதை அமைக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு அந்தப் பணிகளும் பாதியில் விடப்பட்டுள்ளன.
கோரிக்கை
பலமுறை கொடைக்கானல் நகராட்சி மற்றும் அரசு துறை அலுவலர்களிடம் தெரிவித்தும் எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. ஏரியை சுற்றி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பாதாளச்சாக்கடை திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் ஏரியை சுற்றி அமைந்துள்ள விடுதிகளின் கழிவுகள் நேரடியாக ஏரிக்குள் கலப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மாசடைந்துள்ள கொடைக்கானல் ஏரியை தூய்மைப்படுத்த தமிழ்நாடு அரசும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நட்சத்திர ஏரி மாசு அடைவது குறித்து நகராட்சி ஆணையாளர் நாராயணன் கூறுகையில், “ஏரி மாசு அடைந்து வருவது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஏரியில் கழிவுகள் கலக்கவில்லை. ஏரியை சுற்றி அமைந்துள்ள மரங்களில் இருந்து பூக்கள் விழுகின்றன. இது தொடர்பாக, அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க : 'இவன் என் மகன்! கண்ணும் கருத்துமாக வளர்க்கிறேன்'- கண்ணகி