திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மேல்மலை மற்றும் கீழ்மலை கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது.
இங்கு உருளைக் கிழங்கு ,வெள்ளைப்பூண்டு , பீன்ஸ், கேரட், பீட்ருட் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை அப்பகுதி மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.
கொடைக்கானலில் விளையும் மலைக்காய்கறிகள் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில் விவசாய நிலங்களையும், விவசாய பயிர்களையும் காட்டுப்பன்றி, யானை, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
மேலும், விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்படுவதாகவும், விவசாயத்தில் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
வன விலங்குகள் சேதப்படுத்தும் விவசாய பயிர்களுக்கு வனத் துறை உரிய இழப்பீடு வழங்குவதில்லை எனவும் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கொடைக்கானல் துணை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அதில், வனவிலங்களை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் , விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், காட்டுப்பன்றிகளை சுட்டுக் கொல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இது குறித்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கொடைக்கானலில் விவசாயிகள் மாபெரும் போராட்டம் நடத்துவோம் எனவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் மனு!