கரோனா பெருந்தொற்று காரணமாக சுற்றுலாத் தலங்களான கொடைக்கானல், ஏற்காடு போன்றவற்றிற்குச் சுற்றுலாப் பயணிகள் செல்ல தமிழ்நாடு அரசு சார்பாக தடைவிதிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கபட்ட நிலையில் கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்று சுற்றுலாப் பயணிகள் வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கொடைக்கானலில் தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா ஆகியவை சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்குத் திறக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதில் செட்டியார் பூங்கா பராமரிப்பு இல்லாமலும் புதர்மண்டியும் காணப்படுகிறது. மேலும் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு மலரே இல்லாமல் செடிகள் காய்ந்து கிடக்கின்றன.
மேலும் இங்கு வரும் ஒரு சில சுற்றுலாப் பயணிகளும் ஏமாற்றமடைந்து செல்கின்றனர்.
எனவே, சுற்றுலாப் பயணிகளைக் கவரும்விதத்தில் பூங்கா பராமரிப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பதே சுற்றுலாப் பயணிகளின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.