திண்டுக்கல்: திண்டுக்கல் நகர காங்கிரஸ் அலுவலகத்தில் சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களிடம் நேற்று (ஆக. 16) பேசுகையில், "ஆண்டுதோறும் பிரதமர் மோடி சுதந்திர தின விழாவில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு திட்டம் உள்ளது என பொய் கூறி வருகிறார். இதேபோன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தருவதாக கூறினார். ஆனால் அது யாருக்கும் கிடைக்கவில்லை.
ஆப்கான், பெகாசஸ்...
ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபன் படை பிடித்துள்ளது, இது இந்தியாவுக்கு மிகவும் ஆபத்தானதாகும். இது பாகிஸ்தானுக்கும் மிகப்பெரிய ஆபத்தாக முடியும். எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இந்தியாவில் அத்தனை எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் தொடர்புடைய தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளன. இது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய கேடாகும்.
நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினர்கள் கூச்சல் எழுப்புவதற்கு காரணமே பிரதமர் சரியான பதில் கூறாததுதான். அதிமுக உதவியுடன் எல்ஐசி உள்பட பல பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம் ஆவதற்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு தமிழ்நாடு மக்களிடம் அதிமுக பதில் சொல்லியாக வேண்டும்.
திமுக சிறப்பாக செயல்படுகிறது
நல்ல பொருளாதார மேதை தமிழ்நாடு நிதியமைச்சர் உள்ளார். திமுக அரசு சிறப்பாக செயல்படுகிறது. இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தேர்தல் அறிக்கை சொன்ன பல நல்ல திட்டங்களை திமுக.அரசு அறிவித்துள்ளது. இந்தாண்டு நீட் தேர்வு இருக்கும் என்பதை ஏற்கனவே சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துவிட்டார்" என்றார். இவருடன் மாவட்டத் தலைவர் மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.
நாட்டின் பொருளாதாரம், உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.100 லட்சம் கோடி மதிப்பீட்டில் 'கதி சக்தி' திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஏழைகளுக்கு 100% வீட்டுவசதி- மோடி அறிவிப்பு