திண்டுக்கல் மாவட்டம் மேட்டு ராஜக்காப்பட்டியில் பிரசித்திப்பெற்ற காளியம்மன் கோயில் உள்ளது. இங்கு பொதுமக்கள் ஒன்றுச் சேர்ந்து 25 வருடங்களாக 'காளி' என்ற ஜல்லிக்கட்டு மாட்டை செல்லமாக வளர்த்து வந்துள்ளனர். இந்த மாடு திண்டுக்கல் மட்டுமின்றி திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொண்டு பல வெற்றிகளை குவித்துள்ளது.
இந்த காளையானது போட்டிக்குச் செல்வதற்கு முன் கோயிலில் மண்டியிட்டு, தலைவணங்கி காளியம்மனை வணங்கிதான் செல்லும். இந்த வருடம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டு யாரிடமும் பிடிபடாமல் பல்வேறு பரிசுகளை வென்றது. இப்பகுதி கிராம மக்கள் இந்த காளையை சொந்த குழந்தையை போல் பாசத்துடன் வளர்த்துவந்தனர்.
இந்நிலையில் வயது முதிர்வாலும், உடல்நிலை குறைவாலும் நேற்று 'காளி' உயிர் பிரிந்தது. இதன் இழப்பு ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர்கள், வீரர்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இறந்த காளையின் உடலுக்கு தாரை தப்பட்டை முழங்க, மாலைகள் அணிவித்து மரியாதை செய்து அதனை அடக்கம் செய்தனர். இந்த இறுதிச்சடங்கில் திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர்.