திண்டுக்கல்: நத்தம் அருகே உள்ள மூங்கில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையா (வயது 45), கூலி தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி கோகிலா என்ற மனைவியும் மாறிச்செல்வம்(14), கவிவரதன் (11), பிரநிஷா (5) என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஈராக் நாட்டில் கட்டிட வேலைக்காகச் சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி ஈராக் நாட்டில் இருக்கும் சின்னையா தனது மனைவியின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அவர் பேசும் வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் அன்று சின்னையா தற்கொலை செய்து கொண்டதாக அங்கு பணிபுரிபவர்கள் கோகிலாவிற்குத் தகவல் கூறியுள்ளனர். அதையடுத்து தனது கணவர் உடலை ஈராக் நாட்டிலிருந்து மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும் என நத்தம் வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரிடம் மூன்று முறை கோகிலா தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து கண்ணீர் மல்க மனு அளித்துள்ளார்.
மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி இது தொடர்பாக அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று உள்ளதாகவும் விரைந்து நடவடிக்கை எடுத்து உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதனிடையே இறந்த சின்னையா தான் இறப்பதற்கு முன் தனது மனைவி மற்றும் உறவினர்களுக்கு அவர் பேசிய காணொளியை அனுப்பி உள்ளார்.
இதையும் படிங்க: Palladam Murder case: 4 பேர் கொலை வழக்கு.. முக்கிய நபர் சுட்டுப்பிடிப்பு - போலீசார் தகவல்!
அதில், “ தான் இறப்புக்குக் காரணமானவர்கள் பெயர்களைக் குறிப்பிட்டு வேண்டுமென்றே திட்டமிட்டு வாட்ஸ் அப் மூலம் அவதூறான சில விஷயங்களைப் பரப்பி விட்டதாகவும் அதன் காரணமாக தன்னால் வாழ இயல முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்து 38 நாட்கள் ஆன நிலையில் இந்தியா தூதரக முயற்சியில் சின்னையாவின் உடல் விமான மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு அங்கிருந்து அமரர் ஊர்தி வாகனம் மூலம் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. கணவர் உடலைக் கண்ட மனைவி கோகிலா கதறி அழுதபடி மயக்கம் அடைந்தார். பிழைப்புத் தேடி வெளிநாடு சென்ற சின்னையா அங்கே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,
இதையும் படிங்க: தபால் நிலையத்தில் சிறு சேமிப்பு பணம் கையாடலா?.. பொது மக்கள் முற்றுகை.. ஊழியர்களுடன் வாக்குவாதம்!