திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம் சிறுகுடி அருகே உள்ள வடமாடு மஞ்சுவிரட்டு விழா கமிட்டி சார்பில் ஆறுமுக ராஜா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், திண்டுக்கல் நத்தம் அருகேயுள்ள சிறுகுடியில் வடமாடு மஞ்சுவிரட்டு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்றுவந்தது. எங்கள் ஊரில் 1000 ஆண்டுகளாக தொன்றுதொட்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெற்று வந்தது. ஜல்லிக்கட்டுக்கு தனிக்கோவில் இருந்ததாக தொல்லியல் துறை ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.
சிறுகுடியில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடத்துவது வழக்கம். 2006ஆம் ஆண்டுவரை வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தி வந்தோம். அதன்பிறகு நீதிமன்றம் தடை ஆணை காரணமாக வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெறவில்லை. அதன் பிறகு தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள ஜல்லிக்கட்டு விழா சிறப்பு சட்டம் 2017 படி, அந்தந்த மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு மற்றும் வடமாடு மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றுவருகிறது. ஆனால் எங்கள் கிராமத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெறவில்லை . இதுகுறித்து மனு அளித்தும் எந்தப் பயனும் இல்லை. எனவே, திண்டுக்கல் மாவட்ட அரசு இதழில், சிறுகுடியை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெறும் பகுதியாக சேர்க்க வேண்டும். சிறுகுடியில் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி வழங்கியும் , அரசிதழிழ் சேர்க்கவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி , ரவீந்திரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கை குறித்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.