திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகேயுள்ள காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தில் கரோனா பெருந்தொற்று கண்டறியப்பட்டவர்களுக்கான தனிமைப்படுத்தும் மையம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்த மையம் நிலக்கோட்டைக்கு மாற்றப்பட்டு தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது.
தொடர்ந்து இங்கு கரோனா பாதித்தவர்களுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் சிகிச்சையளித்து வந்தனர். இங்கு முதற்கட்டமாக 135 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே இந்த மையத்தில் சித்த மருந்து சிகிச்சை வழங்கும் வகையில், சித்தா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றப்பட உள்ளது.
இம்மையத்தில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு முழுமையாக சித்த வைத்திய முறையில் சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு மையமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் 80 படுக்கை வசதிகளுடன் கூடிய இந்த சிகிச்சை மையத்தில், கபசுரக் குடிநீர், பிரம்மானந்த பைரவ மாத்திரை, ஆடாதோடை மணப்பாகு உள்ளிட்டவற்றுடன் சிறப்பு கசாய குடிநீர் வழங்கப்பட உள்ளது. அதேபோல் ஆவி பிடிப்பதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு சித்தா சிகிச்சை மையம் இன்று (ஆகஸ்ட் 5) முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.