தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாகக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால் நேற்றுமுதல் (ஜூன் 7) மளிகை, காய்கறிக் கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை திறந்துகொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், பழனி நகரின் நடுவில் பிரதானமாக உள்ள நகராட்சிக்குச் சொந்தமான காந்தி மார்க்கெட்டில் 300-க்கும் மேற்பட்ட காய்கறி, மளிகைக் கடைகள் உள்ளன. தனிக்கடைகள் மட்டுமே செயல்பட அனுமதி என்பதால் பழனி காந்தி மார்க்கெட்டில் உள்ள கடைகளைத் திறக்கக் கூடாது என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். காந்தி மார்க்கெட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட மளிகைக் கடைகள் உள்ளன. அதேசமயம் பழனி நகரம் ஒன்றியம், கொடைக்கானல் மேல்மலை கீழ்மலை கிராமங்கள் வரை அனைத்துப் பகுதிகளுக்கும் காந்தி மார்க்கெட் பகுதியில் இருந்தே உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இது குறித்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது, “நகராட்சி அலுவலர்கள், தனிக் கடைகள் மட்டுமே அனுமதி என்று கூறி காந்தி மார்க்கெட் கதவைத் திறக்க அனுமதி மறுத்துள்ளதால், நகரப் பகுதிக்குள் இருக்கும் சில்லறை கடைகளில் உணவுப்பொருள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் மளிகைப்பொருள்கள் விலையும் உயரும்.
எனவே உணவுப்பொருள் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் அரசு அறிவித்துள்ள காலை 7 மணிமுதல் மாலை 5 மணி வரை பழனி காந்தி மார்க்கெட்டை திறக்க அலுவலர்கள் அனுமதி அளிக்க வேண்டும்.
இந்நிலை தொடர்ந்தால் நாளைமுதல் காந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்கு ஆதரவாக பழனி முழுவதும் உள்ள மளிகைக்கடைகள் அனைத்தும் அடைத்துப் போராட்டம் நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் தொடர்ந்து கணிசமாகக் குறையும் கரோனா!