திண்டுக்கல்: அறுபடை வீடுகளுள் ஒன்றான பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை புரிவர். மேலும், கிருத்திகை, பங்குனி உத்திரம் மற்றும் தைப்பூசம் போன்ற விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவது வழக்கம்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (அக் 03) கிருத்திகை தினத்தை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர். வழக்கமாக இரவு 9.30 மணிக்கு ராக்கால பூஜை முடிந்து கோயில் நடை அடைக்கப்படும். அப்போது, இரவு 9 மணி வரை பக்தர்கள் மலை மீது ஏறுவதற்கு கோயில் பாதுகாவலர்களால் அனுமதி வழங்கப்படும்.
இத்தகைய சூழ்நிலையில், திருப்பூரைச் சேர்ந்த பக்தர் ஒருவர் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய இரவு 9 மணிக்கு மேலாக மலையின் அடிவாரத்தில் உள்ள கதவுகளின் படிக்கட்டுகள் வழியாக மலை மீது ஏறிச் செல்ல அனுமதிக்கக் கோரி, பணியில் இருந்த கோயில் பாதுகாவலர்களிடம் வாக்குவாதம் செய்து உள்ளார். இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் தகராறாக மாறி ஒருவரையொருவர் தாக்கி உள்ளனர்.
இதன் பின்னர், பணியில் இருந்த சக பாதுகாவலர்கள் அந்த பக்தரை இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைக்க முயன்று உள்ளனர். மேலும், பழனி மலை அடிவாரத்தில் பக்தரும், கோயில் பாதுகாவலர்களும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பக்தரைத் தாக்கியதாகக் கூறப்படும் கோயில் பாதுகாவலர்களான ராஜேஷ், செல்வ கணபதி, தங்கவேல் மற்றும் கருப்பையா ஆகிய நான்கு பேரையும் தற்போது பணியிடை நீக்கம் செய்து கோயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: “பிக்பாஸில் வயதானவர்களை முதலில் அனுப்பிவிடுவார்கள்” - வனிதா விஜயகுமார் கூறியது என்ன?