திண்டுக்கல்: பழனியை அடுத்த அமரபூண்டி கிராமத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, மண்டையன் என்ற சங்கர் முன்விரோதம் காரணமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். சங்கர் கொலையாகி மூன்றாண்டுகள் கடந்த நிலையில் அவரது கூட்டாளிகளும், சகோதரரும் சேர்ந்து கொலையாளிகளை அச்சுறுத்தும் வகையில் பழனி முழுவதும் நினைவஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் போஸ்டர் ஒட்டிய சங்கரின் சகோதரன் விஜய் மற்றும் கூட்டாளிகள் சூரியா, சந்துரு, நாகராஜன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். இதனையடுத்து கைது செய்தவர்களிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் சங்கரை கொலை செய்தவர்களை அச்சுறுத்தவே போஸ்டர் ஒட்டியது தெரியவந்தது.
மேலும் கைது செய்யப்பட்ட நபர்கள் மீது ஏற்கெனவே கொலை மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளன. இந்தநிலையில் பொது இடத்தில் அச்சுறுத்தும் வகையில் போஸ்டர் ஒட்டியது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பழனி காவல்துறையினர் நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பழனி கிளைச் சிறையில் அடைத்தனர்.
பழனியைச் சேர்ந்த ரவுடிகள் சங்கர், மாரிமுத்து, பெருவாளி ஆகிய மூவரின் கூட்டாளிகளிடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதும், ஒருவருக்கொருவர் பழிக்குப்பழியாக கொலை செய்யும் சம்பவங்களை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பழனியில் பரபரப்பை ஏற்படுத்திய நினைவஞ்சலி போஸ்டர்