திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ளது காமராஜர் நீர்த்தேக்கம். விடுமுறை நாள்களில் பொதுமக்கள் நீர்தேக்கத்தை சுற்றி பார்ப்பதற்காக வருவது வழக்கம். இந்நிலையில் இன்று (மார்ச் 14) திண்டுக்கல் நாகல் நகர், பாரதிபுரம், வேடப்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் நாகராஜ், கார்த்திக் பிரபாகரன், லோகு, செல்வபரத், சுதர்சன் உட்பட ஆறு பேர் காமராஜர் நீர்தேக்கத்தில் குளிப்பதற்காகச் சென்றுள்ளனர்.
இதில் சுதர்சன் என்ற மாணவன் தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக ஆத்தூர் வரை சென்றுள்ளார். மற்ற ஐந்து பேருக்கும் நீச்சல் தெரியாத நிலையில் அவர்கள் குளிப்பதற்காக நீர்தேக்கத்திற்குள் இறங்கியுள்ளனர். இதனையடுத்து நீர்தேக்கத்தின் ஆழமான பகுதிக்கு சென்ற அவர்கள் மாயமாகினர்.
அப்போது, தண்ணீர் பாட்டில் வாங்கி வந்த சுதர்சன், தன் நண்பர்களை காணவில்லை என்று சத்தம் போட்டுள்ளார். மாணவனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அருகிலிருந்தவர்கள், உடனடியாக காவல் துறை, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் அணைக்குள் இறங்கி 5 மாணவர்களின் உடல்களையும் மீட்டனர். இதுகுறித்து செம்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: 'மாற்றி மாற்றி செருப்பால் அடித்துக் கொண்ட காதல் ஜோடி' - பாடாய் படுத்திய பஞ்சாயத்து