திண்டுக்கல்: கொடைக்கானலில் பூம்பாறை, கூக்கால், கவுஞ்சி, மன்னவனூர் உள்ளிட்ட மேல்மலைப் பகுதிகள் அமைந்துள்ளன. இந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து கொடைக்கானல் போலீசார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கூக்கால் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் ஆனந்தன், ராமன்மாதாரி மகன் குழந்தைவேலு, சுடலை நாதன் மகன் பாலசுப்பிரமணி, கருப்பச்சி நாதன் மகன் ராஜேந்திரன், கவுஞ்சி பகுதியை சேர்ந்த வனராஜ் மகன் ராஜேந்திரன் ஆகியோர் மேல்மலைப் பகுதிகளில் கஞ்சா விற்பது தெரியவந்தது.
தொடர்ந்து கொடைக்கானல் காவல்துறையினர் இவர்களை சுற்றி வளைத்து பிடித்து சோதனை மேற்கொண்டனர். சோதனையில் இவர்களிடமிருந்து ஐந்தரை கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது குறித்து கொடைக்கானல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, கஞ்சா விற்பனை செய்த 5 பேரையும் கைது செய்தனர்.