திண்டுக்கல்: கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் புதிய ரேஷன் அரிசி கிடங்கு மற்றும் பழைய கிடங்கு ஆகியவற்றை தமிழ்நாடு உணவுத்துறை மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
தொழிலாளர் தினம் என்பதால் கிடங்கில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சால்வை அணிவித்தும் தேநீர் வழங்கியும் அவர்களுடன் ராதாகிருஷ்ணன் கலந்துரையாடினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது, ''கொடைக்கானலில் உள்ள 49 ரேஷன் கடைகளில் 30,550 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த ரேஷன் கார்டுகளுக்கு மாதம்தோறும் 530 மெட்ரிக் டன் அரிசி சப்ளை செய்யப்படுகிறது. கொடைக்கானலில் இந்த மாதம் பருப்பு சப்ளை செய்வதில் ஏற்பட்ட தாமதம் விரைவில் சீர் செய்யப்படும்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2.3 கோடி ரேஷன் கார்டுகளுக்கு 35 ஆயிரத்து 949 ரேஷன் கடைகள் உள்ளன. இப்போது நெல் கொள்முதல் காலம் என்பதால் இதுவரை 35 லட்சத்து 73 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டை விட 2.14 லட்சம் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலுவைத்தொகை 140 கோடி ரூபாய் விரைவில் விடுவிக்கப்படும். கூட்டுறவுத்துறை மூலம் வேளாண் கடனாக 13,442 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. தானிய விநியோகம் ரேஷன் கடைகள் மூலம் வழங்குவதற்குரிய ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் கேப்பை ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும். கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்ட சிறு தானியங்களும் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசியில் செறிவூட்டப்பட்ட அரிசியும் பொது மக்களின் நலனுக்காக கலந்து விற்கப்படுகிறது. செறிவூட்டப்பட்ட அரிசியை அச்சமின்றி பொதுமக்கள் உண்ணலாம். தமிழ்நாட்டில் வேளாண் கடனாக 14 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்பிற்கு ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் வழங்கப்படும். 2 ஆயிரம் புதிய ரேஷன் கடைகள் கழிப்பறை வசதிகளுடன் அமைக்கப்படும். கிடங்கு உள்ளிட்டவைகளில் பணி செய்யும் பணியாளர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும்'' எனவும் கூறினார்.
இதையும் படிங்க: லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலி; 16 பேர் படுகாயம்!