திண்டுக்கல்: மதுரை முதல் நத்தம் வரை நான்கு வழிச்சாலை பணிகள் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இதற்கான பணியை ஐவிஎல்ஆர் என்ற தனியார் நிறுவனம் செய்து வருகிறது. இந்நிலையில் நத்தம் அருகே லிங்கவாடி மலைப்பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்திலிருந்து மணல் எடுக்கப்பட்டு வந்தது.
தொடர்ந்து மணல் அள்ளுவதால் தங்களது விவசாய நிலங்கள், மற்றும் இயற்கை வளம் பாதிப்படைவதாகவும், சில நபர்கள் பட்டா நிலங்களில் உரிய அனுமதியின்றி மணல்களை எடுக்க அனுமதிப்பதால் அருகே உள்ள தங்களது விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஐவிஎல்ஆர் நிறுவனத்துக்குச் சொந்தமான வாகனங்கள் மூலம் அரசு அனுமதியின்றி மணல் அள்ளுவதாக கூறி டிப்பர் லாரி, பொக்லைன், ஹிட்டாச்சி வாகனம் உள்ளிட்ட மூன்று வாகனங்களை அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சிறை பிடித்து வாகனங்களை ஓட்டி வந்த நபர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் தீனதயாளன் மற்றும் நத்தம் காவல் துறையினர், மணல் அள்ளுவதற்கான அனுமதியை கேட்டபோது திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அனுமதி சீட்டை வைத்து நத்தம் அருகே லிங்கவாடி பகுதியில் மணல் எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அனுமதியின்றி மணல் கடத்திய வாகனங்களை பறிமுதல் செய்து காவல் துறையினர், காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
மேலும், கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இதேபோல நத்தம் பகுதியில் பல்வேறு இடங்களில் சாலை அமைப்பதற்கான அனுமதியின்றி மணல் திருடுவதாக விவசாயிகள் மற்றும் சமூக அலுவலர்கள் புகார் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த 36 பேர் கைது