திண்டுக்கல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் காந்தி காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல், சிறுமலை, கோபால்பட்டி, நத்தம், வடமதுரை, ரெட்டியார் சத்திரம், ஆத்தூர் , ஆடலூர், பன்றிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விளையும் அனைத்துக் காய்கறிகளும் தினமும் வியாபாரத்திற்கு கொண்டு வருவது வழக்கம்.
கடந்த வருடத்திலிருந்து விவசாயிகள் கொண்டுவரும் காய்கறி மூட்டைகளுக்கு விலை அதிகமாகவும் அவர்கள் வரும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் அதிகமாகவும் வசூலிக்கப்பட்டதால் விவசாயிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். இட நெருக்கடி காரணமாக விரைந்து விளை பொருட்களை எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
ஆனால், கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு சிறுமலை விவசாயிகள் தங்களது காய்கறிகளை காந்தி காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு வராமல் சிறுமலை அடிவாரத்திலேயே காய்கறிகளை இறக்கி விற்பனை செய்தனர். காய்கறி சந்தை மொத்த வியாபாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்பட்டதால் காந்தி காய்கறி சந்தை மொத்த வியாபாரிகள் திண்டுக்கல் பழனி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள சுமார் ஆறு ஏக்கர் பரப்பளவில் புதிய காய்கறி சந்தை போடப்பட்டது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், எங்களுக்கு ஒரு மூட்டைக்கு ரூ ஐந்துவரை செலவினம் குறைகிறது. இதனால் தினமும் ஒரு விவசாயி 50 முதல் 100 மூட்டைகள்வரை கொண்டு வரும்பொழுது எங்களது வாகன செலவு குறைகிறது. காந்தி மார்க்கெட் போதிய இட வசதி இல்லாததால் ஏற்பட்ட சிரமம் தற்போது குறைந்துள்ளது என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் மக்கள் சந்திப்பைத் தவிர்க்க வேண்டும்' - புதுச்சேரி பேரவைச் செயலர்