திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ருக்வார்பட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவர் சில மாதங்களுக்கு முன்பு இவருக்கும் இவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, தனது 13 வயது மகளுடன் தனித்து வாழ்ந்து வருகிறார். இவர் அப்பனூத்து பகுதியில் விவசாய தோட்டத்தை பிரகாஷ் என்பவரிடமிருந்து குத்தகைக்கு வாங்கி விவசாயம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், தனது தோட்டத்திற்கு அருகில் கௌதம் என்கிற பால் விற்பனையாளரிடம் 1 லட்ச ரூபாய் கடன் பெற்று, நான்கு மாடுகளை வாங்கி விவசாயம் செய்து வந்துள்ளார். சில தினங்களாக தான் இருக்கும் இடத்தில் போதிய தண்ணீர் வசதி இல்லாத காரணத்தினால், மாடுகளை தனது பெற்றோரின் வசிப்பிடத்தில் விடுவதற்காக கொண்டு சென்றுள்ளார்.
ஆனால் வாங்கிய கடனை கொடுக்காத காரணத்தினால், கடன் கொடுத்த கௌதம் அந்த மாடுகளை பிடித்துச் சென்றதாக கூறப்படுகிறது. அதனை அடுத்து மனமுடைந்த பழனிசாமி, வீடியோ ஒன்றை பதிவிட்டு, தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதன் பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சை அளிப்பதற்காக திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பழனிசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழனி அருகே கடனை திருப்பி செலுத்த முடியாமல் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஆந்திராவில் இருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 100 கிலோ கஞ்சா பறிமுதல்; இருவர் கைது..!