திண்டுக்கல்: தென்னக ரயில்வேக்கு கூடுதல் வருமானம் கொடுக்கும் நிலையமாக நெல்லை ரெயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து நெல்லை, கன்னியாகுமரி, அனந்தபுரி உள்ளிட்ட ரயில்கள் இரவு நேரத்தில் சென்னைக்கு இயக்கப்படுகிறது. நெல்லையில் இருந்தும் நெல்லை வழியாகவும் இயக்கப்படும் அனைத்து ரயில்களிலும் எப்பொழுதும் பொது மக்களின் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது.
தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களுக்கான முன்பதிவு அறிவித்த சில நிமிடங்களிலேயே விற்று தீரும் நிலையே இன்றளவும் உள்ளது. இந்த நிலையில் தென் தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரயில், நெல்லை - சென்னை இடையே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
எட்டு பெட்டிகளுடன் 540 பேர் பயணிக்கும் அளவில் இந்த ரயில் வரும் 24ஆம் தேதி முதல் இயங்குகிறது இதனை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார். நெல்லையில் காலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் செல்கிறது. மறுபடியும் மதியம் 02.50 சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் புறப்படும் ரயில் இரவு 10.40 மணிக்கு நெல்லையை சென்றடைகிறது.
ஏழு சாதாரண ஏசி இருக்கை வசதி கொண்ட சேர் கார்களும், ஒரு நவீன இருக்கை வசதிகள் கொண்ட எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் என எட்டு பெட்டிகள் இதில் இணைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் டிஜிட்டல் முறையில் வடிவமைக்கப்பட்ட இந்த ரயில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கை குழந்தை வைத்திருப்பவர்கள் பயன்படுத்தும் வகையிலும் கழிவறைகள் நவீன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் கட்டணங்களை வெளியிட்டுள்ளது தெற்கு ரயில்வே. அதன்படி, சாதாரண ஏசி வகுப்பு கட்டணம் ஜிஎஸ்டி உட்பட ரூ.1,620 என்றும் ஏசி சொகுசு வகுப்பு கட்டணம் ரூ.3,025 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதன் வேகம் 110 முதல் 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது. வரும் 24ஆம் தேதி நெல்லை - சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ள நிலையில் நேற்று (செப் 21) சென்னையில் இருந்து நெல்லைக்கு ரெயில் கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில் சோதனை ஓட்டம் இன்று (செப் 22) காலை 6 மணிக்கு நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது. இந்த ரெயிலில் ரெயில்வே உயர் அதிகாரிகள், பொறியாளர்கள் பயணிக்கின்றனர். இந்த சோதனை ஓட்டத்தில் ரெயில் நாள்தோறும் செல்லும் வேகத்தில் இயக்கப்படுகிறது.
விருதுநகருக்கு 7.15 மணிக்கும், மதுரைக்கு 7.50 மணிக்கும் சென்று சேர்கிறது. எந்த ரெயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டுமோ அங்கும் ரெயில் நிறுத்தி சோதனை செய்யப்பட்டது . திண்டுக்கல்லுக்கு 8.45 மணிக்கும், திருச்சிக்கு 9.55 மணிக்கும் வந்தது சேர்ந்தது.
அதைத் தொடர்ந்து விழுப்புரம் வழியாக சென்னைக்கு மதியம் 1.50 மணிக்கு சென்று சேர்கிறது. இதனால் சென்னையில் இருந்து நெல்லை வரை 8 மணி 2 நிமிடங்களில் செல்லக்கூடிய விரைவு ரயிலாக மக்கள் மத்தியில் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சோதனை ஓட்டத்தில் 5.30 மணி நேரத்தில் மதுரை வந்த வந்தே பாரத் ரயில்!