திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி ஆலந்தூரான் பட்டியைச் சேர்ந்தவர் ஈஸ்வர மூர்த்தி(49). இவர் திருப்பூர் மாவட்டம் நாச்சிப்பாளையம் பகுதியில் சபரி ஆண்டவர் ஈமு ஃபார்ம்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி, அதில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் பண்னை அமைத்துக் கொடுத்து மாதம் 8000 ரூபாய் வழங்கப்படும் எனவும், 2 ஆண்டுகளுக்குப் பின் வைப்புத் தொகை திருப்பி தரப்படும் எனக் கூறியுள்ளார்.
இரண்டாவதாக விஐபி என்ற திட்டத்தில் ஒன்றரை லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் பண்ணை அமைத்துக் கொடுத்து, மாதம் 12,000, ஆண்டிற்கு 20,000 போனஸ், 2 ஆண்டுகளுக்குப் பின் முழு பணமும் திருப்பி தரப்படும் என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த அறிவிப்பை நம்பி 11 பேர் மொத்தம் 15 லட்சத்து 58 ஆயிரத்து 800 ரூபாய் பணத்தைக் கொடுத்துள்ளனர். அதனைப் பெற்றுக் கொண்டு ஈஸ்வரமூர்த்தி மோசடி செய்துள்ளார். இதுகுறித்து முதலீட்டாளரில் ஒருவரான திருப்பூர் மூகாம்பிகை நகரைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் டான்பிட் சட்டத்தின் கீழ் 406, 420 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்ட வந்த நிலையில், வழக்கு கோவை பொருளாதார குற்றப் பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டது. ஈஸ்வர மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததைத் தொடர்ந்து அவருக்கு பிடிவாரண்ட் போடப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, ரவி ஈமு பண்ணை அமைத்துத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட ஈஸ்வர மூர்த்திக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் 15 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.