திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பகுதியில் நேற்று (டிச.5) முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் அதிமுக எடப்பாடி அணியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகனும், வத்தலக்குண்டு நகர செயலாளராக பீர்மு கமதுவும் தனித்தனியாக அஞ்சலி செலுத்தினர்.
இருவருக்கும் இடையே உள்ள உட்கட்சி கருத்து வேறுபாடு காரணமாக, வத்தலக்குண்டு பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் பெரியகுளம் சாலையில் மிக அருகருகே தனித்தனி மேடைகள் அமைத்து ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
இவ்வாறு, ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவுநாள் அஞ்சலி கூட்டத்தை நகரச்செயலாளர் பீர்முகமது மற்றும் ஒன்றிய செயலாளர் மோகன் அணியினர் என இரு அணிகளாக நடத்திய சம்பவம் அக்கட்சி தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
கடந்த சில மாதங்களாக அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு அணிகளாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி வரும் நிலையில், தற்போது வத்தலக்குண்டு பகுதியில் அதிமுக எடப்பாடி அணிக்குள்ளே உள்ள நகர செயலாளரும், ஒன்றிய செயலாளரும் தனித்தனியே நிகழ்ச்சி நடத்திய சம்பவம் அதிமுக தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடையே குழப்பதை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி அமையும்' - ஓபிஎஸ் உறுதிமொழி