திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் முதல் செம்பட்டி வரை ஒரு வழிச் சாலையை இருவழிச் சாலையாக மாற்றும் விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் பணியும் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், ஸ்ரீராபுரம் அருகே உள்ள அரச மரத்துப்பட்டி, இரட்டை வேப்பமரம் பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணியின்போது ஊழியர்களின் அலட்சியப் போக்கால் மின்கம்பத்தின் மீது வாகனம் மோதி, சுமார் 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன.
இதன்காரணமாக, அப்பகுதியிலுள்ள பல தோட்டங்களுக்கும், வீடுகளுக்கும் செல்லும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால், விவசாயிகள் தங்களது வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் இரு நாள்களுக்கு மேலாக அவதிக்குள்ளாகியுள்ளனர். இது குறித்து புகார் தெரிவித்தும் எவ்விதமான நடவடிக்கை எடுக்கவில்லை என, பொது மக்கள், விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இப்பிரச்னை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நேரடியாக தலையிட்டு, தங்களுக்கு மின் கம்பங்கள் சேதத்தால் தடைப்பட்டிருக்கும் மின் இணைப்பை உடனே வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.