கரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த ஆறு மாதமாக மக்கள் வேலையின்றி தவித்து வந்தனர். தற்போது ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வேலைகளுக்குச் செல்ல துவங்கியுள்ளனர். ஆனால் தற்போதுவரை நாடகங்கள் நடத்த அரசு அனுமதியளிக்கவில்லை. இதனால் நாடக நடிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரோனா நிவாரணம் வழங்க வேண்டும், வயதான ஏழை நடிகர்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும், கலை பண்பாட்டு மையத்தை திண்டுக்கல் மாவட்டத்தில் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் நாடக நடிகர் சங்கம் சார்பில் நாடக நடிகர்கள் நாரதர், குறத்தி, வள்ளி, தெய்வானை போன்ற வேடமிட்டு 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து பேசிய நாடக நடிகர்கள், "திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 235 நாடக நடிகர்கள் ஊரடங்கால் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவு, திருவிழா காலத்தில் பிறப்பிக்கப்பட்டதால் நாடகம் நடத்த முடியாமல் போய்விட்டது. ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் சூழ்நிலை உள்ளது. எங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு பொது இடங்கள், கோயில் திருவிழாக்களில் நாடகம் நடத்த அனுமதியளிக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.