திண்டுக்கல்: இந்தியா போன்ற ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்கள் மீதான வன்முறையை நிறுவ கட்டமைக்கப்பட்ட ஒரு அமைப்பாகவே திருமணம் உள்ளது. பொதுவாகப் பெண்கள் குழந்தையிலிருந்தே திருமணத்திற்கு தயார் செய்யப்படும் ஒரு ஜீவராசியாகவே வளர்க்கப்படுகிறார்கள். இதனால் அவர்களது ஆசை, கனவு என அனைத்தையும் திருமணம் என்ற ஒற்றைப்புள்ளி ஒட்டுமொத்தமாக தகர்த்து விடுகிறது.
நம் சமூகத்தில் பெண்கள் மீது நிகழும் அடக்குமுறை அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பது திருமணம் என்ற அமைப்புதான். அதன் வெளிப்பாடுதான் கைம்பெண், முதிர்கன்னி, வாழாவெட்டி போன்ற சொல்லாடல்கள். இதுபோன்ற எந்தச் சொல்லாடலும் ஒரு ஆணின் திருமண வாழ்வு குறித்து பேசுவது கிடையாது. இதன் மூலம் ஒரு பெண்ணின் வாழ்வு அவள் திருமண உறவை சுற்றி இருப்பதை தெளிவுப்படுத்துகிறது.
தமிழ்த்துறை பேராசிரியர் பேட்டி
பெண்ணின் திருமண வயது குறித்து நம்மிடம் பேசிய காந்திகிராம பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் குருவம்மாள், "பெண்ணுக்கு திருமண வயது எது என்ற கேள்வியே அபத்தமானது. பெண்ணுக்கான திருமண வயதை அவள்தான் தீர்மானிக்க வேண்டும். ஒரு குடும்பத்திற்குள் ஒரு பெண் நுழைந்து சமாளிப்பதைவிட, சமூகத்திற்குள் தனக்கான அடையாளத்தை தேட பெண் நுழைவது மிகவும் கடினமான ஒன்று.
ஒரு பெண் தனக்கு எது வேண்டும், எது வேண்டாம் என்பதை தீர்மானிக்க இச்சமூகம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. தனது முடிவுகளை பெண்கள் மீது திணிப்பதே அவர்களுக்கு வழக்கமாக உள்ளது. அதில் ஒன்றுதான் திருமண வயது நிர்ணயம்.
உண்மையில் ஒரு பெண்ணுக்கு திருமணம் என்பது எப்போது வேண்டுமானால் தனக்கான வருமானத்தை பெறுவது மட்டுமின்றி தன்னால் நான்கு பேருக்கு வேலை உருவாக்கிட முடியும் என்ற சூழலுக்கு முன்னேற வேண்டும். அதன் பின்னரே பெண்கள் திருமணத்திற்கு தயாராக வேண்டும்.
ஏனெனில் வாழ்க்கை என்பது குடும்பம், கணவன், குழந்தை என்பது மட்டும் கிடையாது. நாம் வாழும் சமூகம், அதிலுள்ள மக்கள் அனைவருக்கும் நாம் பயனுள்ளவர்களாக ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும். இந்த வயதில் தான் திருமணம் செய்ய வேண்டும் இல்லையென்றால் காலாவதி ஆகி விடுவார்கள் என்று கூறுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. எந்த வயதிலும் திருமணம் செய்து கொள்ளலாம். அது எப்போது என்பதனை பெண்கள் தான் தீர்மானிக்க வேண்டும்" என்றார்.
சமூக நல ஆர்வலர் மூத்து மீனா
தனது பணி காலத்தில் 70 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்திய ஓய்வுபெற்ற திண்டுக்கல் மாவட்ட சமூக நல அலுவலர் முத்துமீனா கூறுகையில், "பெண்களுக்கான திருமண வயது 18 என்பது மிகவும் குறைந்த ஒன்று. ஏனெனில் இந்தப் பருவத்தில் அவர்கள் பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்திருப்பார்கள். அதனால் எப்போதும் ஒருவரை சார்ந்தே தங்களுக்கான முடிவை எடுக்க வேண்டிய நிலை இருக்கும்.
இதனால் தன்னிச்சையாக முடிவெடுக்கும் சூழலும் பக்குவமும் அவர்களுக்கு குறைவாகவே இருக்கும். இதுவே 21 வயதில் திருமணம் செய்து கொள்ளும்போது கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு சென்று இருப்பார்கள். அதன் மூலம் வெளியுலக அனுபவம் கிடைத்திடும்.
அதைவிட முக்கியமான ஒன்று அவளுக்கான அடையாளத்தை அவளது வேலை உருவாக்கிடும். தங்களது படிப்பையும், வேலையையும் நேசிக்கும் ஒருவராக தான் பெண்கள் வாழ வேண்டும். குறிப்பாக பொருளாதார சுதந்திரம் கிடைக்கும்போது யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெண் தனக்கான வாழ்க்கையை வாழ முடியும்.
ஆனால் தனக்கான வாழ்க்கை என்பதை சமூகம் குற்றமாகவே பார்க்கிறது. ஏனெனில் ஒரு பெண் தனியாக வாழ்ந்தால் எப்படி அவ்வாறு வாழ முடியும் என்ற கேள்வி எழுகிறது. குழந்தை, கணவன், குடும்பம் என்ற ஒரு அமைப்பை விடுத்து தனியாக ஒரு பெண் வாழும் போது அது தவறான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
திருமணமானாலும் தனக்கு எது தேவை என்பதை பெண்தான் முடிவு செய்திட வேண்டும். ஒரு தவறான திருமணத்திலிருந்தோ, எதிர்பாராத இழப்பில் இருந்தோ மீண்டு வர வேண்டுமானால் கண்டிப்பாக பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் தேவைப்படும். எனவே எல்லா பெண்களும் சுயமாக சம்பாதித்து தங்களது வருமானத்தில் சிறிதாவது சேமித்து வைத்திட வேண்டும். அதுவே அவர்களுக்கான சுயமரியாதையை அதிகரிக்க உதவிடும்.
திண்டுக்கல் போன்ற நகரங்களில் ஏற்கனவே குழந்தை திருமணங்கள் அதிகம் நடைபெறுகிறது. இச்சூழலில் இதுபோன்ற சட்டங்கள் இயற்றப்படும்போது கடுமையான வழிமுறைகளுடன் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் இதற்கான பயன் இருக்கும் மாறாக பெயருக்கு செயல்படுத்துவதாக அறிவிப்பதால் எந்த ஒரு பயனும் இருக்காது" என்று கூறினார்.
அடக்குமுறை வாழ்க்கை
அடக்குமுறைகளுக்கு இடையேயான வாழ்க்கையை யாராலும் வாழமுடியாது என்கிறார் ஜீவிதா. தொடர்ந்து அவர் பேசுகையில், "24 வயதான எனக்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. என்னைப்பொறுத்தவரையில் திருமண வயது என்பது தனக்கான தேவைகளை ஒரு பெண் தானே பூர்த்தி செய்யும் அளவு வருமானம் ஈட்டும் போது நடைபெறுவதுதான். அதன்படி பார்க்கும்போது 18 வயதான பெண் எப்போதும் தாயையும், குடும்பத்தாரையும், கணவனை சார்ந்தே இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பாள். அதுவே 21 வயதாகும் போது அவள் தனக்காக முடிவுகளைப் தானாக எடுக்கும் பக்குவத்தை ஓரளவுக்காவது பெற்றிருப்பாள்.
வருமானத்தில் சிக்கனமாக பார்க்க வேண்டும் என்பார்கள். ஆனால் அது அவசியமே இல்லை. நாம் முன்னேறுவதற்கான வழிவகைகளை நாம் வகுத்து கொண்டால் சிக்கனம் என்ற வட்டத்திற்குள் இருந்துகொண்டு கஷ்டப்பட வேண்டிய அவசியம் கிடையாது. இதெல்லாம் இப்போதுள்ள சூழலுக்கு ஒத்துவராது" என்றார்.
இது குறித்து பேசிய பசுமை வானொலி நிலைய இயக்குனர் அட்லின் ஹலன், "எப்போதுமே பெண்களுக்குத்தான் திருமணம் ஒரு தடையாக வந்து நிற்கிறது. ஏனெனில் நமது சமூகத்தில் ஆண்களுக்கு எந்த ஒரு பொறுப்புமே வழங்கப்படுவதில்லை. ஒரு பெண் தனது திருமண வாழ்க்கையை தொடங்கும் போது தனது அடையாளத்தை இழந்து அனைவரையும் கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை சமூகம் ஏற்படுத்தியுள்ளது.
இதையெல்லாம் செய்யத் தவறும் பட்சத்தில் அவள் தவறானவள் என்ற பிம்பத்தை கட்டமைக்கின்றனர். உண்மையில் தனக்கான அடையாளத்தை தேடும் பெண்களை பொதுவெளியில் பார்க்கும் பார்வையே மாறுகிறது. குடும்பம், குழந்தை, பணி இத்தனையும் ஒரு பெண் சமநிலையில் சரிசெய்து பயணிப்பது அத்தனை எளிதல்ல.
மாற்றம் பிறக்குமா?
என்னோடு பயின்ற பள்ளி தோழிகள் நன்றாக படித்தாலும் என்ன செய்கிறார்கள் என்று கேட்டால் அதற்கு பதிலே இல்லை. பல நேரங்களில் நன்கு படித்திருந்தால் கூட திருமணம் என்பது தடையாக வந்து அவர்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக நிற்கிறது.
எங்கு தவறு நிகழ்ந்தாலும் அதற்கான பொறுப்பும் பெண்மீது தான் போடப்படுகிறது. இதுபோன்ற ஏற்றத்தாழ்வுகளை மாற்ற பெற்றோர் தங்களது பிள்ளைகளை சமமாக நடத்த வேண்டும். ஆண், பெண் என்ற பேதமின்றி நீ எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என கற்பிக்காமல் இருக்க வேண்டும்.
உதாரணத்திற்கு சமையல் எல்லோருக்கும் தேவையானது, பொதுவானது. இதில் ஆண், பெண் என்ற பேதம் ஏதுமின்றி அனைவரும் உண்பது போல அனைவரும் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை சிறுவயதிலிருந்தே கற்பிக்க வேண்டும். இது போன்ற கற்பிதங்கள் தான் அவர்களுக்குள் மாற்றத்தை ஏற்படுத்த வழிவகுக்கும்" என்றார்.
இதையும் படிங்க: பெண்களின் திருமண வயது அதிகரிப்பதால் ஏற்படும் மருத்துவ நலன்கள்: மருத்துவர் விஜயா சிறப்புப் பேட்டி