திண்டுக்கல் மாவட்டம் பழனி கோயிலில் முருகனை தரிசிக்க வந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதில், "தற்போது அதிமுக தலைமையில் உள்ள கூட்டணியில் பாஜக இருக்கிறது. ஆனால், தேர்தல் நேரத்தில் கட்சிகளின் நிலைப்பாடு, அரசியல் சூழ்நிலை பொருத்து அந்த நேரத்தில் முடிவெடுக்கப்படும். அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பூசலை அவர்கள் விரைவில் தீர்த்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். தற்போதைய சூழலில் தமிழ்நாட்டில் ஆளுமைமிக்க தலைவர்கள் யாருமில்லை. இதை சொன்னால் என் மீது வருத்தம் ஏற்படும்.
பிணத்தை வைத்து அரசியல் செய்யும் திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் இந்த நிலைக்கு தேர்தல் ஜூரமே காரணம். 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு அந்த கட்சிகளுக்கு எல்லாம் சாந்தி நிலை ஏற்படும். அதேபோல் மத்திய அரசு விவசாயிகளுக்கு எளிமையாக நிவாரணம் செல்ல வேண்டும் என்பதற்காக மட்டுமே கிசான் திட்டத்தை கொண்டுவந்தது. இதில் தவறு நடந்தது துரதிர்ஷ்டவசமானது. இனி வரும் காலங்களில் இதுபோன்ற தவறு நடக்காத வகையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: மத்திய அரசுக்கு காவடி தூக்கும் மாநில அரசு - டி.ஆர். பாலு கடும் தாக்கு