திண்டுக்கல், செம்பட்டி அருகேயுள்ள அக்கரைப்பட்டியில் ஆல்பர்ட் என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. அங்கு அதேப் பகுதியைச் சேர்ந்த நபர்கள் சீட்டுக்கட்டு சூதாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் அக்கரைப்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்த வீரன் என்பவரும் பண்ணைக்காட்டைச் சேர்ந்த சங்கர் என்பவரும் அங்கு சென்று சீட்டு விளையாடியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து சங்கர், வீரனிடம் 30 ரூபாய் கடனாகக் கேட்டுள்ளார். ஆனால் வீரன் தரமறுத்துவிட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சங்கர் அருகிலிருந்த மரக்கட்டையை எடுத்து வீரன் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார்.
இதில் வீரன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அங்கிருந்து சங்கர் தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்த செம்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், தப்பி ஓடிய சங்கரை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.