திண்டுக்கல் நிலகோட்டையில் பிள்ளையார் நத்தம் பகுதி உள்ளது. இப்பகுதியில் வடக்குத் தெருவில் வசித்து வரும் ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமாக 95 சென்ட் விவசாய நிலம் உள்ளது. ஆனால், ராஜேந்திரனின் நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த ஆண்டியப்பன், போஸ், செல்வம் ஆகிய மூன்று நபர்களும் போலி ஆவணங்களை தயாரித்து பட்டா பெற்று, ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இதையடுத்து, தனது நிலத்தை மீட்கும் போராட்டத்தில் ராஜேந்திரன் முயன்றார். அவர் பலமுறை நிலக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், மனவேதனைக்கு உள்ளான ராஜேந்திரன், இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு அளிக்க வந்துள்ளார்.
அப்போது, திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த விஷ பாட்டிலை எடுத்து விஷத்தை அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதைப் பார்த்த காவல் துறையினர், ராஜேந்திரனை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: தலைமை செயலகத்தில் கொரோனா விழிப்புணர்வு