திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை வனச்சரகத்திற்குட்பட்ட தென் மலைப்பகுதியில் அரிதான அழியும் தருவாயில் உள்ள உயிரினங்கள், தாவரங்களைப் பாதுகாக்கும் வகையில் பல்லுயிர் பூங்கா அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, விதி எண் 110ன் கீழ் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, இந்த பல்லுயிர் பூங்காவிற்கான அடிக்கல் நாட்டு விழா, சிறுமலை அகஸ்தியர் புரத்தில் நேற்று நடந்தது. இதில், தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு, ரூபாய் 5 கோடி மதிப்பில் பல்லுயிர் பூங்கா அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
பின்னர் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில் , "இந்தப் பூங்கா அமைவதன் மூலமாக அரிய வகை மூலிகைத் தாவரங்களையும், அரிய வகை மரங்களைப் பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும். இந்தப் பூங்காவில் மூங்கில் பூங்கா, ஆர்கிட்டோரியம் பூங்கா, உயர் கோபுரங்கள், சிறுவர், சிறுமியருக்கான விளையாட்டு பூங்கா அமைக்கப்படும்.
மேலும், சிறுமலை பகுதியைச் சுற்றுலா பகுதியாக மாற்றிட சாலை வசதிகள், அடிப்படை கட்டமைப்பு ஆகியவை மேம்படுத்தப்படும். இப்பகுதி மக்கள் வீட்டுமனை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அதற்கு அரசு சார்பில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் மருதராஜ், மாவட்ட வன அலுவலர் வித்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:ஆவணம், கோப்புகளை எச்சில் தொட்டு திறக்க வேண்டாம் - உயர் அலுவலர் உத்தரவு