திண்டுக்கல்: மூன்றாவது நாளாக 251 பாட்டில் மதுபானங்களை திண்டுக்கல் ரயில்வே காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கரோனா தொற்று நோய் பரவலை தடுக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஒருசில இடங்களில் மதுபானங்களைப் பதுக்கி வைத்து சிலர் கள்ளத்தனமாக அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதால் கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு பல்வேறு வகைகளில் மதுபானங்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை காவல்துறையினர் தடுத்து பல இடங்களில் மது பாட்டில்களைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கர்நாடகாவிலிருந்து ரயில்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு மதுபானங்கள் கடத்தப்படுவதாக இருப்புப்பாதை ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இன்று(ஜூன் 3) கர்நாடக மாநிலத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு சென்ற அனைத்து ரயில்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பெங்களூருவிலிருந்து தூத்துக்குடிக்கு சென்ற மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒரு பெட்டியில் பயணிகள் இருக்கைக்கு அடியில் மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 251 பாட்டில் மதுபானங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், மதுபாட்டில் கடத்திய துத்துக்குடியைச் சேர்ந்த சாமுவேல்ராஜ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுவரை கர்நாடகாவில் இருந்து மது கடத்தி வந்ததாக தூத்துக்குடியைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1000க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்யக்கூடாது - நீதிமன்றம் உத்தரவு