நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை தேசிய ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அத்தியவாசிய தேவைகளைத் தவிர மக்கள் யாரும் வெளியே செல்லக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் ஏற்கனவே சுபமுகூர்த்த நாட்களில் சில திருமணங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஒரு சில திருமணங்கள் மட்டும் அதே தேதியில் மிக எளிமையாக நடக்கிறது.
அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் ஆதிலட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன்க்கு 30ஆம் தேதி திருமணம் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணமகன் பாலமுருகன் தனது திருமணத்தை அதே தேதியில் தனது சொந்த கிராமத்தில் நடத்த திட்டமிட்டார்.
அதன்படி திண்டுக்கல் மாவட்டம் ஆதிலட்சுமிபுரம் பகுதியில் உள்ள தனது சொந்த கிராமத்து வீட்டில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மணமகள் வர்ஷாவிற்க்கும் - பாலமுருகனுக்கும் கரோனா விழிப்புணர்வுடன் முகக்கவசம் அணிந்துவாறு சொந்தங்கள் 7 பேர் மற்றும் ஐயர் முன்னிலையில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.
அனைவரின் பாதுகாப்பை கருதி அரசின் உத்தரவின்படி மிக எளிமையாக கூட்டம் கூட்டாமல் திருமணம் நடத்தப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சமூக விலகலை கடைபிடித்து நடைபெற்ற திருமணம்