திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள பண்ணப்பட்டி கோம்பை பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து ஊருக்குள் யானை ஒன்று புகுந்துள்ளது.
அப்போது, தோட்டத்தில் வேலை பார்த்துகொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த முருகன்(60) என்பவரை யானை தாக்கியுள்ளது . இதில், படுகாயமடைந்த முருகன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கடந்த ஒரு மாத காலமாக ஏழு யானைகள் கொண்ட குழு ஒன்று, நீலமலைக்கோட்டை முதல் கன்னிவாடி அணை வரை தொடர்ந்து அலைந்து கொண்டிருக்கிறது. இதுவரை இந்த யானைகள் 300 தென்னை மரங்களை அழித்துள்ளது.
இதனால் , பெரும் அச்சத்திலிருந்த பொதுமக்கள் இது குறித்து கடந்த ஒரு மாதகாலமாக வனத்துறை , மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது உயிர் பலி ஏற்பட்டுள்ளது.
இதனால், ஆத்திரமடைத்த அப்பகுதி மக்கள் பழனி- மதுரை நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர், வனத்துறை அலுவலர் உள்ளிட்ட நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, நிரந்தர தீர்வு காண வழிவகுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: காரை விரட்டிய யானை: தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!