திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் கடந்த 25ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன், கந்தசஷ்டி திருவிழாவை அடுத்து பக்தர்கள் கந்த சஷ்டி விரதம் மேற்கொண்டனர். கந்தசஷ்டி திருவிழாவின் ஆறாம் நாளான இன்று (அக்.30) மாலை பழனி கிரி வீதிகளில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
முன்னதாக, இதனையொட்டி விரதம் இருந்த பக்தர்கள் இன்று காலை முதல் திருவாவினன்குடி மற்றும் பழனி மலைக்கோயிலில் முருகனை வழிபட்டு ஆறுநாட்களுக்குப்பிறகு விரதத்தை நிறைவு செய்யும் வகையில் வாழைத்தண்டு விரதம் மேற்கொண்டனர்.
சூரசம்ஹாரம் நிகழ்ச்சி முடிந்து, சூரனை வெற்றிவாகை சூடியதை அடுத்து அருள்மிகு சண்முகர்-வள்ளி, தெய்வயானை சமேதர் திருக்கல்யாண வைபவம் முடிந்தவுடன், சஷ்டி விரதம் இருந்துவந்த பக்தர்கள் முழு அன்னம் உண்டு, விரதத்தைப் பூர்த்தி செய்வர்.
இன்று மாலை நடைபெறும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்துள்ளனர். சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மாநில காவல்துறை தூங்கிக் கொண்டிருக்கிறதா..? - ஜெயக்குமார் கேள்வி