திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா நாளை (ஜனவரி 12) கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. பத்து நாள்கள் நடைபெறக்கூடிய தைப்பூசத் திருவிழாவின் 6ஆம் நாளான ஜனவரி 17ஆம் தேதி திருக்கல்யாணமும், 7ஆம் நாளான ஜனவரி 18ஆம் தேதி தைப்பூசத் தேரோட்டமும் நடைபெற உள்ளது.
இந்நிலையில், வருகிற ஜனவரி 14ஆம் தேதிமுதல் 18ஆம் தேதிவரை வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி இல்லை எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தைப்பூசத் திருவிழா குறித்து திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், “தைப்பூசத் திருவிழா நடைபெறும் ஜனவரி 14ஆம் தேதிமுதல் 18ஆம் தேதிவரை பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. நாளை நடைபெறவுள்ள தைப்பூசத் திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அதேபோல் திருவிழாவின்போது தினசரி நடைபெறும் நிகழ்ச்சி, திருக்கல்யாணம், தேரோட்டம், தெப்ப உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பக்தர்கள், மண்டகப்படிதாரர்களுக்கு அனுமதி இல்லை.
தைப்பூசத் திருவிழா நிகழ்ச்சிகள் ஆகம விதிப்படி கோயில் ஊழியர்களைக் கொண்டு நடத்தப்படும். இந்த நிகழ்ச்சிகளை வலைதளம், யூ-ட்யூப் சேனல் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. எனவே நாளை, நாளை மறுநாள் (ஜனவரி 13) ஆகிய இரண்டு நாள்களுக்கு மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துவருகிறது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியின் அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி தைப்பூசத்தி திருவிழா மிகவும் சிறப்புடையது. இந்தத் தைப்பூசத் திருவிழாவின் அனைத்து முக்கிய நிகழ்வுகளும் நேரலையாக ஒளிபரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. அதனை பக்தர்கள், Arulmigu Dhandayuthapaniswamy Temple, Palani - என்ற YouTube channel மூலம் அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமாரசுவாமி அருள்பெறலாம்.
மேற்படி, இந்தத் தகவலினை தங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டு அனைவரும் அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமாரசுவாமி வழிபாட்டினை நேரலையில் கண்டு இறையருள் பெறவும் உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடக்குமா? - உயர் நீதிமன்றக்கிளையில் தாக்கலான புதிய மனு!