கரோனா பெருந்தொற்று பரவலின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வெளியே செல்வதைத் தவிர்த்து வீட்டிலேயே இருந்துவருகின்றனர்.
இந்த ஊரடங்கு உத்தரவினால் அத்தியாவசிய பொருள்கள் தடையின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இருப்பினும், ஊரடங்கு உத்தரவு எதிரொலியாக காய்கறி விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் வழக்கத்தைவிட காய்கறிகளின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. கொடைக்கானல் நகர் பகுதியில் மூஞ்சிக்கல், காமராஜர் சாலை ஆகிய இடங்களில் காய்கறி சந்தை அமைக்கப்பட்டுள்ளன. இங்கு காலை 9 மணி முதல் மதியம் 12 மணிவரை விற்பனை நடைபெறுகிறது. இதனால் பொதுமக்கள் அதிக அளவில் இங்கு கூடி காய்கறிகளை வாங்கிச்செல்கின்றனர்.
காய்கறிகளின் விலைப்பட்டியல் கிலோ வாரியாக:
- தக்காளி ரூ.60
- கத்தரிக்காய் ரூ.70
- பீன்ஸ் ரூ.120
- பீட்ரூட் ரூ.100
- அவரைக்காய் ரூ.80
- தேங்காய் ஒன்று ரூ.50
- பட்டாணி ரூ.60
- பெரிய வெங்காயம் ரூ.100
- சின்ன வெங்காயம் ரூ.140
அனைத்து காய்கறிகளும் தற்போது விலை உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வேலையின்றி வீட்டில் முடங்கி இருக்கும் நிலையில், காய்கறிகளின் விலை உயர்வு தங்களுக்கு பெரும் சுமையாக உள்ளதாக மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா எதிரொலி: வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வருவதில் சிக்கல்