உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸின் தாக்கம் தமிழ்நாட்டில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து நான்காவது நாளாக 100க்கும் மேற்ப்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின் படி, இன்று(ஜூலை17) திண்டுக்கல் மாவட்டத்தில் 163 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,356ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம் மாவட்டத்தில் இன்று மட்டும் 74 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை சிகிச்சை முடிந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 727ஆக அதிகரித்துள்ளது. மேலும் கரோனாவால் இதுவரை 27 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
இதனிடையே நத்தம் பகுதியில் கரோனா பரவாமல் தடுப்பதற்காக முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், நத்தம் பேருராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நத்தம் பேருராட்சி அலுவலகம் கிருமி நாசினி தெளித்து தற்காலிகமாக மூடப்பட்டது.