சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு,பழனி அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.இந்தப் படத்திற்கு தற்காலிகமாக 'விஜய் சேதுபதி 46' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு குறித்த தகவல் அறிந்து ஏராளமான பொதுமக்கள் விஜய்சேதுபதியை காண மண்டபம் முன்பு குவிந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. அப்போது, படப்பிடிப்பில் பணிபுரியும் நடிகர்கள், ஊழியர்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றவில்லை என சுகாதரத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சுகாதாரத்துறை துணை இயக்குநர் ஜெயந்தி அங்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது படக்குழுவினர், முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து படக்குழுவினருக்கு ரூ. 1,500 அபராதமாக விதிக்கப்பட்டது. அண்மையில் திண்டுக்கலில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது, இதே படக்குழுவினர் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக செய்திகள் வெளியானது.