திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே அம்மாபட்டி கிராமத்தில் முருகானந்தம் வளர்மதி தம்பதியினர் கடந்த 2013ஆம் ஆண்டு ஸ்ரீ மாயக்காரி மாசாணியம்மன் என்ற கோயிலை உருவாக்கினர்.
தினந்தோறும் அதற்காக சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்து வருகின்றனர். இந்த கோயிலுக்கு அமாவாசை, பௌர்ணமி, தேய்பிறை, அஷ்டமி ஆகிய தினங்களிலும், வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களிலும் கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.
அதேபோல் மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி, தேய்பிறை, அஷ்டமி ஆகிய தினங்களில் மதியம் அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு கோயில் நிர்வாக தம்பதியினருக்கு மாசாணி அம்மனின் அருள் வாக்கில் கரோனா மாரியம்மன் சிலை வைத்து வணங்கும்படி உத்தரவு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி தனியாக கரோனா மாரியம்மன் சிலை அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், தற்போது சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் கோயிலில் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்ட நிலையில் மற்ற தினங்களில் இந்த கோவில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருவதாக கோயில் நிர்வாகியும், பூசாரியுமான முருகானந்தம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 24 காளைகளைப் பிடித்த வீரருக்கு கார் பரிசு